Popular Posts

Popular Posts

Tuesday, October 28, 2014

தோலுக்கு தோள் கொடுங்கள்!

தோலுக்குத் தோள் கொடுங்கள்! நம்மை அடையாளம் காணவும், அழகாய் காட்டவும் உதவி செய்யும் மிக பெரிய உறுப்பு தோல்தான். நமது எலும்புகள், உள்ளுறுப்புகளை கவர் செய்து உடலை அழகாகக் காட்டுகிறது. அந்த அழகு கிடைக்க, தோல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். தேவையற்ற பழக்கங்களளால் தோலில் ஏற்படும் பிரச்னைகள் பற்றி புதுக்கோட்டையைச் சேர்ந்த தோல் நிபுணர் டாக்டர் அமுதா சொல்கிறார். ''உடல் எடையில் 16 சதவிகிதம் தோல். பெரிய மற்றும் உடலின் மிக புதிரான உறுப்புகளில் ஒன்று. சில பழக்கங்களால் நமது அழகும் ஆரோக்கியமும் போய்விடுகிறது. புகைப்பிடிப்பதால்.. தோலில் சுருக்கங்கள் ஏற்படுத்துவதில் புகைப்பழக்கம் முக்கிய பங்காற்றுகிறது. சருமத்தின் வெளிப்புறங்களில் உள்ள மிகச்சிறிய ரத்த நாளங்களின் அளவை புகைப்பழக்கம் குறைத்துவிடும். இதன் மூலம் சருமத்துக்குள் ஆக்ஸிஜன் சென்று வருவது குறையும். புகைப்பழக்கத்தால் நீட்சித்தன்மை குறைந்துவிடும். ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் கால்களில் புண் வர அதிக வாய்ப்பு உள்ளது. வாயின் உட்பகுதி, உதடு போன்ற இடங்களில் தோல் புற்றுநோய் வரலாம். உதடுகளில் வெடிப்புகளை ஏற்படுத்தும். இதனால், சிறுவயதிலேயே வயது முதிர்வும் வரக்கூடும். மதுவினால்..  மது அதிகம் அருந்துவதால், வைட்டமின் பற்றாக்குறை ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் காசநோய், நிமோனியா, ஹெச்.ஐ.வி மற்றும் பிற பாலியல் தொடர்பான (மலட்டுத் தன்மையை வரவழைக்கும்) நோய்களின் தாக்குதல்கள் ஏற்படுகின்றன. எனவே அதிகமான குடிப்பழக்கம் உள்ளவர்கள் பாலியல் தொடர்பான தொற்று நோய்களால் தாக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் வாயில் புற்றுநோய், தோலில் சிவப்புப் புள்ளிகள், சிவந்து போதல், வாயின் ஓரத்தில் புண்கள், ரத்தசோகை போன்றவையும் ஏற்படும். தோலில் சுலபமாக காயங்கள் வரும்; ஏற்கெனவே இருக்கும் காயத்தை விரைவில் குணமடையாது. மற்றவை வெற்றிலை பாக்கு, பான் மசாலா போன்ற எல்லா வகையான பாக்குமே தோலுக்கு எதிரிதான். அலர்ஜி, வாய்  எரிச்சல், தோல் வறண்டு போதல், தோலின் நிறம் மாறுதல், பற்களின் நிறம் மாறுதல், ஒவ்வாமை நோய், அனிமியா போன்றவை வரும். புகையிலை மெல்லுதலால் வாயில் புற்றுநோய் வர நேரிடும். பல் சிதைவு, ஈறுகளில் வரும் பாதிப்புகள், தோல், உதடு, பல் போன்றவையின் நிறம் மாற்றம் ஆகியவை புற்றுநோயின் அறிகுறிகள். இவை எல்லாம் கெட்ட பழக்கம் என்று தெரிந்தே செய்து, நோயின் பிடியில் மாட்டிக்கொள்வதில் முக்கியமானவை. மறுபுறம், நமக்குத் தெரியாமலே அல்லது அலட்சியத்தால் நாம் செய்யும் தவறுகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை... கைப்பேசியினால்.. அதிகமாக போனில் பேசும்போது காது ஓரங்களில் ஊராய்வு  ஏற்படும். அரிப்பு ஏற்படும், அரித்த இடம் கறுப்பாக மாறும். அதில் இருந்து வரும் வெப்பத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் வரும்.போனை நாம் பயன்படும்போது நமது கையின் சுத்தத்தை மறந்துவிடுகிறோம். நாம் பயன்படுத்தும் போனில் எண்ணற்ற பாக்டீரியா போன்ற கிருமிகள் இருக்கும். அதை அதிக நேரம் முகத்தோடு ஒட்டி வைத்து பேசுவதால், அதிகபடியான பருக்கள் வரும். தூக்கம்        தோலின் புத்துணர்ச்சியை மீட்டு எடுப்பதில் தூக்கத்துக்கு முக்கிய பங்கு உண்டு. 8 மணி நேரம் சரியாக  தூக்கம் இல்லை என்றால், ஹோர்மோன்களில் மாறுபாடு ஏற்படும். சரியான தூக்கம் இல்லாததால் முகப்பரு, தடிப்பு, கருவளையம் போன்றவை வரகூடும். மேக்கப்  இயற்கையான தோலுக்கு செயற்கை பொருட்கள் எல்லாமே பாதிப்பைதான் தரும். தோலின் மேல்புறத்தில் உள்ள துளைகளை, கெட்டியான கிரீம், வாசனை திரவம் போன்றவை மூடும்போது அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.  வாசனை திரவியம், ஹேர் டை, லிப்ஸ்டிக், பாடி ஸ்ப்ரே, மஸ்கார,  ஐ லைனர் போன்றவை எல்லாம் தோலுக்கு அழகைத் தந்து ஆரோக்கியத்தைப் பறித்துவிடும். இவை இரண்டு வகையான தோல் பாதிப்பை பொதுவாக உண்டாக்கும். 1) இரிட்டேட் கான்டாக்ட் டெர்மடீஸ்  (irritant contact dermatitis) , இது  தோலில் எரிச்சலை உண்டாகும். 2) அல்லெர்ஜிக் கான்டாக்ட் டெர்மட்டீஸ் (allergic contact dermatitis)  இது தோலில் அரிப்பு, வீக்கம், கொப்புளம் போன்றவை வர வழிவகுக்கும். ஹார்மோன் ஹார்மோன்களும்கூட தோலை பாதிக்கும் விஷயங்களில் பங்களிக்கின்றன. மாதவிடாய் காலங்களில் ஓய்ஸ்ரோஜெனின் (Oestrogen) அளவுகளில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தோலிலும் ஏற்படுகின்றன. ஓய்ஸ்ட்ரோஜெனின் அளவு குறையும்போது, புதிய தோலை உருவாக்கும் செல்களின் உற்பத்தி குறைகிறது. அதன் மூலம் சருமப் பகுதி கடினப்பட்டுவிடுகிறது. இதனால் சருமப் பகுதிகளில் போதுமான அளவு தண்ணீர், உறுதித்தன்மை ஆகியவற்றை பராமரிக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, இந்த ஹார்மோன்களை சீராக வைத்துக்கொள்ள தினசரி உடற்பயிற்சி, யோகா போன்றவை செய்ய வேண்டும். சரியான உணவு முறை ரொம்ப முக்கியம். அதிலும் உங்கள் சருமத்துக்கு ஏற்ற உணவுகள் சாப்பிட வேண்டும். வைட்டமின் சி மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்'' என்று டிப்ஸ் கொடுத்தார். கவனம்! - கே.அபிநயா

No comments:

Post a Comment

Please leave your comments here to improve postings, information and quality.